யாழ் விரிவுரையாளர் கொலை-வெளியானது வைத்திய அறிக்கை

 

சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை..சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் உறுதி .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குறித்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் நேற்று நடைபெற்றது. மரண விசாரணையின் போது விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர்.

இதன்போது சாட்சியமளித்த பொலிஸார், உயிரிழந்த விரிவுரையாளரின் இறப்புக்கு காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.

இருவரது மரண விசாரணைகளுக்கு பின்னர் வழக்கை எதிர்வரும் ஜீன் மாதம் 3ம் திகதிக்கு திகதியிட்ட நீதிவான், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தை அன்றையதினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும்

இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் ஆஜராகினர்.

Post a Comment