மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் சிறிகல, கிரிமண்டல சந்திக்கருகில் இடம்பெற்ற கொடூர விபத்தில் 14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மொனராகலை திசையிலிருந்து ஒப்பேகொட திசையை நோக்கி பயணித்த கெப் ரக வாகனமும், ஒப்பேகொட திசையிலிருந்து மொனராகலை திசையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் மொனராகலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மொனராகலை, மடுல்ல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியும், அவரது 47 வயதுடைய தந்தையுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
விபத்தின் காரணமாக சிறுமியின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தந்தை மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, கெப் வாகனத்தை செலுத்திய 17 வயதுடைய பருவமடையாத பாடசாலை மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மொனராகலை, மந்துருகெட்டிய பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஆவார்.
கெப் வாகனத்தை செலுத்திய சிறுவனிடம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருக்கவில்லை என மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் இலகுரக வாகனப் பயிற்சியாளர்களுக்காக வழங்கப்படும் ஓட்டுநர் பயிற்சி உரிமம் (Learners Permit) மட்டுமே இருந்துள்ளது. அந்த உரிமத்தைக் கொண்டு எந்த வகையிலும் கனரக வாகனங்களை செலுத்துவதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
கெப் வாகனத்தின் ஓட்டுநர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனத்தைச் செலுத்தியதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் ஒரு மைனர் என்பதைக் கருத்திற்கொண்டு ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். மொனராகலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
