6 நாட்களுக்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பாடகி ; கனடாவிற்கு தப்பியோடிய காதலன்

 

காணாமல் போன இளம் வயது பாடகி 6 நாட்களுக்கு பின்பு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி கொலை செய்த முன்னாள் காதலனை பொலிஸார் தேடிவருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே கூபா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்தர் கவுர். கனடாவில் வசித்து வரும் ஒருவர், இன்ஸ்டா மூலம் பாடகிக்கு அறிமுகமாகியுள்ளார். எல்லைகள் கடந்து இருவரின் உரையாடலும் தொடர்ந்து நட்பாக, ஒரு கட்டத்தில் காதலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு தன்னுடைய காரில் கடைக்கு இந்தர் கவுர் சென்றுள்ளார். நள்ளிரவாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மறுநாள் காலையில் இந்தர் கவுர் காணவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸில் புகாரளித்துள்ளனர்

காணாமல் போய் 6 நாட்களுக்கு பின் கூபா கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நீலோ கால்வாயில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் அருகே இரத்தக் கறையுடன் நின்றிருந்த பாடகியின் காரும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து பொலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. பாடகி இந்தர் கவுர், 7 ஆண்டுகளாக சுக்விந்தர் சிங்கை காதலித்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததும் பெண் வீட்டார் சுக்விந்தர் சிங் குறித்து விசாரித்துள்ளனர். அதில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை அறிந்து 7 ஆண்டு காதலை பிரேக்-அப் செய்துள்ளார் இந்தர் கவுர்.

கனடாவிலிருந்து நேபாளம் தலைநகர் காதமாண்டுவுக்கு வந்த சுக்விந்தர், பஞ்சாப் வந்ததும் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து இந்தர் கவுரை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த 13 ஆம் திகதி காரில் கடைக்கு சென்ற பாடகியை துப்பாக்கி முனையில் சுக்விந்தர் சிங் கடத்தி, பின் அவரை காருக்குள்ளேயே கொலை செய்துவிட்டு உடலை கால்வாயில் வீசியுள்ளார். அன்று இரவே நேபாளம் சென்று அங்கிருந்து கனடாவிற்கு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Post a Comment