சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில், இன்று காலை கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் ஒன்று மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் தலையில்லாத உடல் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் இன்று காலை ஒரு பெரிய சூட்கேஸ் நீண்ட நேரமாக அனாதையாகக் கிடந்துள்ளது.
ரயில்கள் வந்து சென்றபோதிலும், அந்த சூட்கேஸை உரிமை கொண்டாட யாரும் வராததால் சந்தேகமடைந்த பயணிகள், அதுகுறித்து அங்கிருந்த ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசாரை அதிரவைத்த காட்சி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், முதலில் அந்த சூட்கேசில் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் எச்சரிக்கையுடன் அந்தச் சூட்கேஸை திறந்து சோதனையிட்டனர்.
ஆனால், அதைத் திறந்தபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு போலீசாரே உறைந்து போய்விட்டனர். ஓர் ஆணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரத்தக் கறைகளுடன் கொடூரமான முறையில் வைக்கப்பட்டிருந்தது.
பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம், சென்னை மக்களையும் ரயில் பயணிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
