இதன்படி, முதற்கட்டமாக 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களையும் (WIP), 2,600 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் (WPC) இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பது இக்கூட்டத்தில் தெரியவந்தது. அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காகச் சமூக ஊடகங்களின் ஊடாக விசேட பிரச்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் (Midwives) கடுமையான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சையில் தோற்றிப் சித்தியடைந்த தமிழ்மொழி மூல மாணவர்களை இத்துறையில் இணைத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
