அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை ஏமாற்றி, கனடாவின் சூப்பர் மார்க்கெட்களில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இந்தச் சந்தேகநபர் பண மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.இதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்ய பலமுறை முயற்சித்த போதிலும், அவர் அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகியிருந்தார்.
பின்னர், பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய சோதனையின் போது, குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இந்தச் சந்தேகநபருக்கு எதிராக நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, அவருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் படி, சந்தேகநபர் மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
