கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னகோன்புர, துபாரா குளத்திற்கு அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததில், 45 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண்ணுடன் சென்ற 10 வயதுடைய மகளைக் காணவில்லை. இச்சம்பவம் ஜூன் 28 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மறைந்த தாயின் மகன், மீன்பிடிப்பதற்காகத் துபாரா குளத்திற்குச் சென்றிருந்தான்.
அவன் வீடு திரும்புவதற்குத் தாமதமானதால், அவனைத் தேடித் தாயும் மகளும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, குளத்திற்கு அருகில் வெட்டப்பட்டிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன 10 வயதுச் சிறுமியைக் கண்டறியும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
