தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், அதிக நீர்மட்டம் கொண்ட நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் லசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் மொத்த நீர்த்தேக்கங்களில் 65% நீர் நிரம்பியுள்ளதாகவும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வெஹெரகல நீர்த்தேக்கம் வான்பாய்வதால் கதிர்காமம் பகுதிக்கு ஓரளவுக்கு அபாய நிலை காணப்படுவதாகவும், மாணிக்க கங்கையைப் பயன்படுத்தும் மக்கள் ஆற்றின் நீர்மட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், இதுவரை பெரிய அளவிலான வெள்ள அபாயம் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவிக்கையில்:
அடுத்த இரண்டு நாட்களுக்கு இதேபோன்ற மழை நிலவரம் தொடரும். தற்போதுள்ள குறைந்த அழுத்த மண்டலம் மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் ஏற்படக்கூடும். மே 15ஆம் திகதிக்குப் பிறகு தற்போதுள்ள மழை வீழ்ச்சி படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்படலாம். இதனால் மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அது குறித்த வானிலை அறிவிப்புகளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை எதிர்பார்க்கப்படலாம் என்றும், இது ஒரு புயல் நிலை அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், அந்தந்த நேரத்தில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டே இந்த எதிர்வுகூறல்கள் செய்யப்படுவதால், இதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
