மஸ்கெலியா, காட்மோர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வந்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் சுமார் 6,18,000 ரூபாய் பெறுமதியான மின்னணு சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், பாடசாலை மாணவர்கள் நால்வர் சனிக்கிழமை (09) மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார இது குறித்துத் தெரிவிக்கையில், 119 அவசர பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய விசேட குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாகக் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் காட்மோர் பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 14 வயதுடைய மாணவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி ஒன்றின் புகைப்படங்களை எடுப்பதற்காகத் தலவாக்கலை பகுதியிலிருந்து 'டொல்பின்' ரக வானில் சுற்றுலாப் பயணிகள் குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் தமது வாகனத்தைக் காட்மோர் நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வீதியோரத்தில் நிறுத்திவிட்டு நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்களான சிறுவர்கள், வானின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை உடைத்து அதிலிருந்த மடிக்கணினி (Laptop), டெப் (Tab) மற்றும் பவர் பேங்க் (Power Bank) ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இப்பொருட்களின் மொத்தப் பெறுமதி 6,18,000 ரூபாய் என அதன் உரிமையாளர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் காட்மோர் தேயிலைத் தோட்டத்திலுள்ள ஒரு பற்றைக்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸாரால் அந்தப் பொருட்கள் அனைத்தும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு சிறுவர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் ஹற்றன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
