டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,217 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்வடைந்துள்ளதுடன், டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் (சுமார் 52.5%) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,392 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10,000 இற்கும் அதிகமானோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீடுகள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலை வளாகங்களில் டெங்கு குடம்பிகள் மற்றும் நுளம்புகள் பெருகும் இடங்கள் இன்னும் முற்றாக ஒழிக்கப்படாமையே இந்த தீவிர பரவலுக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது டெங்கு வைரஸ் வகை 2 (DENV-2) மற்றும் வகை 3 (DENV-3) ஆகிய இரண்டு வகைகளும் நுளம்புகள் மூலம் பரவி வருகின்றன.

நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கும், புகை விசிறல் நடவடிக்கைகளுக்கும் சுகாதாரப் பிரிவினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பின்மையால் எதிர்பார்த்த அளவு நோயாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Post a Comment