மட்டு நகரில் இளம் தாய் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்-மக்களே மிகவும் அவதானம்

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர், டெங்கு காய்ச்சலினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்தில் பதிவான முதலாவது டெங்கு மரணம் இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகப்பேறு வைத்திய நிபுணர் சி. சரவணன், ஏனைய வைத்திய நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாரஞ்சினி இத்தகவலை வெளியிட்டார். 

வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயதுடைய இளம் தாய், கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அவர் 7ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவருக்கு டெங்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் திகதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, வைத்திய நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி அவர் சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார். 

எனினும், பிரசவத்தின் பின்னர் அவருக்குத் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதனால், அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சுமார் 12 அலகுகள் (Units) இரத்தம் ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வராதமையினால் அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் என்பன செயலிழக்கத் தொடங்கின. இந்த நிலையில், அவர் கடந்த 25ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

எனவே, டெங்கு நோயினால் இந்த ஆண்டில் மாவட்டத்தில் மரணித்த முதலாவது நபர் இந்த இளம் தாய் ஆவார் என பணிப்பாளர் தெரிவித்தார். 

வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான, பட்டதாரியான மோகன் ஜெயப்பிரியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment