புத்தளம் மாவட்டம், கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம வீதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பாலத்தின் பாதுகாப்பு வேலியுடன் பலமாக மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மற்றும் அதன் பின் இருக்கையில் பயணித்தவர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 21 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக அவசர சிகிச்சைகளுக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கருவலகஸ்வெவ பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
