குருநாகலில் குடும்பஸ்தர் தடியால் அடித்துக்கொலை: சகோதரன் கைது

குருநாகல் மாவட்டம், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தடியால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவருடைய சொந்தச் சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த சகோதரர், அருகில் இருந்த தடியொன்றால் பலமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸ் நிலையத்துக்குப் பெறப்பட்ட அவசரத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து உடனடியாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உயிரிழந்தவரின் சகோதரரைக் கைது செய்துள்ளனர்.

பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொலை குறித்து வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Post a Comment