YouTube பார்த்து பிரசவம்; பறிபோன இளம் தமிழ் பெண்ணின் உயிர்

தமிழகத்தில் யூடியூப் (YouTube) வீடியோக்களைப் பார்த்துவிட்டு மருத்துவ வழிகாட்டுதல் இன்றி வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள புஞ்சை தளவாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சசிகலா (32) என்ற ஐடி (IT) நிறுவன பெண் ஊழியரே, முறையான பிரசவ சிகிச்சையின்றி நஞ்சுக்கொடி உள்ளே சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்திய ஊடகங்க்கள் வெளியிட்ட தகவல்களின்படி,

சசிகலா மற்றும் அவரது கணவர் குழந்தைசாமி (36) தம்பதியருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

முதல் குழந்தை அறுவை சிகிச்சை (C-Section) மூலம் பிறந்ததால், இந்த முறை எப்படியாவது இயற்கை முறையில் சுகப்பிரசவமாக (Natural Birth) குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று தம்பதியினர் ஆசைப்பட்டுள்ளனர்.

இதற்காகக் கர்ப்பமடைந்த நாள் முதல் எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கும் செல்லாமல், யூடியூப் வீடியோக்களை மட்டுமே தொடர்ந்து பார்த்து பிரசவத்திற்குத் தயாராகி வந்துள்ளனர்.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி அதிகாலை சசிகலாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கணவர் குழந்தைசாமி மற்றும் மாமியார் பழனியாத்தாள் (56) ஆகியோர் இணைந்து யூடியூப் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

அவர்களுக்குப் பெண் குழந்தை நல்லபடியாகப் பிறந்தபோதிலும், பிரசவத்திற்குப் பிறகு கருப்பையிலிருந்து நஞ்சுக்கொடி (Placenta) தானாக வெளியேறாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது. இதனால் சசிகலாவிற்கு மிகக் கடுமையான மகப்பேற்றுக்குப் பிறகான ரத்தப்போக்கு (Post-partum Haemorrhage) ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது.

பேச்சு மூச்சின்றி சரிந்த சசிகலாவை முதலில் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் சசிகலாவின் உயிரைக் காக்கக் கடுமையானப் போராட்டங்களை நடத்தி, அவரது கர்ப்பப்பையை அகற்றியதுடன் 65 யூனிட் ரத்தமும் செலுத்தினர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Post a Comment