Posts

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை


இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,000-ஐக் கடந்து அதிவேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) எச்சரித்துள்ளது.

ஜூன் மாதத்தில் பெய்த பலத்த மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் மாத்திரம் 19,318 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 53,159 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இந்த கொடிய டெங்கு நோய் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் மாதமொன்றிற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,000-க்கும் குறைவாகவே காணப்பட்டது.

எனினும், ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளமை தற்போதைய ஆபத்தான நிலையை உணர்த்துகிறது.

நுளம்புகள் பெருகும் வகையில் வீடுகளையோ அல்லது சுற்றியுள்ள சூழலையோ தூய்மையின்றி வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Post a Comment