மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வயதுடைய தனது மகளிடம் ஒழுங்கற்ற மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் தொடர்ந்து பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 60 வயதுடைய நபரொருவர், பாலியல் கொடுமை தொடர்பான சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 24 வயதுடைய யுவதி, தனது தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொலிஸ் மா அதிபருக்கு இணையவழி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திலிருந்து சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 60 வயதுடைய குறித்த நபர் நேற்று இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையுடன் தொடர்ந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நடத்தையால் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் யுவதி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியை ஆரம்பகட்டமாக பரிசோதித்தபோது, அதில் அதிகளவிலான ஆபாசப் புகைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
