டெல்லி சாகேட்டில் உள்ள மேக்ஸ் வைத்தியசாலையில் நுரையீரல் தொற்று காரணமாக 75 வயதான ராதேஷ்யாம் என்ற முதியவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவர் உயிர் வாழ்வதற்கு அதிக காலம் இல்லை என்று மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்தனர்.
இதனால் படுமோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த அந்த முதியவருடன் தங்களது இறுதி நேரங்களை செலவிடுவதற்காக, பல்வேறு ஊர்களில் வசித்து வந்த அவரது குடும்பத்தினர் அனைவரும் டெல்லியில் ஒன்று கூட ஏற்பாடு செய்தனர்.வைத்தியசாலைக்கு அருகிலேயே தங்கி அவரை பார்த்துக் கொள்வதற்காக, அவரின் குடும்பத்தினர் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறைகளை முன்பதிவு செய்து தங்கியிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, அகர்வால் குடும்பத்தினருக்கு ஒரு மீளாப் பேரழிவாக மாறியது.
அந்த ஓட்டலில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இந்த கொடூர தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடல்நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் இருக்கும் அந்த மூத்த குடிமகனுக்கு, தங்களைப் பார்க்க வந்த குடும்பத்தினர் தீ விபத்தில் பலியான இந்த துயரச் சம்பவம் குறித்து உறவினர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை.
குடும்பத் தலைவரான ராதேஷ்யாமுடன் இருப்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்கள் ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் குருகிராமில் இருந்து டெல்லிக்கு வந்திருந்தனர். ராதேஷ்யாமின் மனைவி பிரேமலதா (70), பட்டயக் கணக்காளராகவும் (சி.ஏ) தனியார் இன்ஷூடெக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் பணிபுரிந்த மகன் விவேக் (47), அழகிப் போட்டி பட்டம் வென்று நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த மருமகள் தர்ஜனி (42) மற்றும் அண்மையில் 10-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்த பேத்தி வர்யா (16) ஆகியோர் குருகிராமில் இருந்து வந்திருந்தனர்.
பெங்களூருவில் பி.டெக். படித்துக் கொண்டிருந்த இவர்களது மூத்த பேத்தி ஜிவிஷா (20), இந்த விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் விமானத்தில் டெல்லி வந்து சேர்ந்திருந்தார். இவர்கள் அனைவரும் இந்த தீ விபத்தில் பலியாகினர். அவர்களுடன் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து வந்திருந்த பிரேமலதாவின் சகோதரி கமலா (52), சகோதரர் அசோக் (56) ஆகியோரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இவர்களுடன் தங்கியிருந்த மைத்துனர் ஜாவேரி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் காணவில்லை என்று தேடப்பட்டு வருகிறார். இவர்கள் முன்னதாகவே தங்களது சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், குடும்பத்தினர் வற்புறுத்தி நீட்டிக்கச் செய்ததால் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது ராதேஷ்யாமின் மகன் விவேக், காலை 8.45 மணியளவில் பதற்றத்துடன் தனது உறவினர்களுக்கு மொபைல் போனில் அழைத்து விபரம் கூறியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்து வந்த விவேக்கின் மைத்துனி ஸ்வாதி, விவேக்கை வெளியே மீட்டு வந்து முதலுதவி அளிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் அவர் அதிகப்படியான புகையை சுவாசித்து உயிரிழந்தார். அவசர கால மீட்பு பணியில் 45 நிமிடங்கள் வரை பெரும் தாமதம் ஏற்பட்டதாகவும், அந்தப் பகுதிக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவது கடினமாக இருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், ஒரு மூத்த தீயணைப்பு அதிகாரி இந்த தாமத குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
தீ விபத்து முடிந்த பின்னர் ராதேஷ்யாமின் மருமகள் தர்ஜனி, தனது அறையில் உடல் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளை வைத்துதான் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அன்று காலை தர்ஜனிக்கு அனுப்பப்பட்ட ‘காலை உணவு வழங்கப்படும்’ என்ற குறுஞ்செய்தியை அவர் பார்க்கவே இல்லை என்பதை அவரது உறவினர் லதா அகர்வால் கண்ணீருடன் காட்டினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு குருகிராமிற்கு குடிபெயர்வதற்கு முன்னதாக, இந்த அகர்வால் குடும்பத்தினர் டெல்லி கோட்லா முபாரக்பூரில் ஒரே கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தனிக் குடித்தனம் சென்றாலும் அவர்களது குடும்ப பிணைப்பு இப்போதும் நெருக்கமாகவே இருந்தது. ஒன்றாக பயணம் செய்வதிலும், பாசமாக நேரம் செலவிடுவதிலும் அகர்வால் குடும்பத்தினருக்கு இருந்த அளவுகடந்த அன்பை அவர்களது சமூக ஊடகப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக, உயிரிழந்த தர்ஜனி தனது சமூக ஊடகப்பக்கத்தில், தனது மூத்த மகள் ஏஞ்சலுக்கு எழுதிய கடிதத்தில், உன் அம்மா உன்னை தீவிரமாகவும், நிபந்தனையின்றியும், மிகுந்த பெருமையுடனும் நேசிக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். இந்த ஒரு விஷயத்தை நீ வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று பதிவிட்டிருந்த பாசவார்த்தைகள், தற்போது எஞ்சியிருக்கும் உறவினர்களிடையே நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
