Posts

18 - 30 வயது இளைஞர்களுக்கு காவல்துறை விடுத்த அதிரடி எச்சரிக்கை!


இள வயது ஓட்டுநர்களின் அவதானமற்ற நடத்தையே வீதிப் விபத்துகளுக்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான மற்றும் அவதானமற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் போக்குவரத்து சட்டங்களுக்கு மட்டுமன்றி குற்றவியல் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ள்யூ.பி.ஜே சேனாதீர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இயங்கும் மொத்த வாகனங்களில் பெரும்பாலானவை உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் எனவும், அவற்றை பெரும்பாலும் 18 முதல் 25 மற்றும் 30 வயது வரையிலானோர் இயக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதிப் போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், இந்த குழுவினர் போக்குவரத்து சட்டங்களையோ அல்லது பொதுமக்கள், பாதசாரிகள் பாதுகாப்பையோ பொருட்படுத்தாமல் செயற்படுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வெள்ளை கோடு மீறுதல் போன்ற குற்றங்களுக்கு உடனடி அபராதம் விதிக்க முடியும் என்றும், ஆனால் அபாயகரமான ஓட்டம் போன்ற கடுமையான குற்றங்களுக்கு எதிராக இப்போது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று முறை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடுமையான விபத்துகள் ஏற்பட்டால் கொலை, கொலை முயற்சி, குற்றமான மனிதக் கொலை மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி காவல்துறை மா அதிபர் டப்ள்யூ.பி.ஜே சேனாதீர தெரிவித்துள்ளார்.

Post a Comment