அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான சந்தை வீதியில், 16 வயது சிறுவன் ஒருவன் உரிமையாளருக்குத் தெரியாமல் வேன் ஒன்றை இயக்கிச் சென்றதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வேன், சந்தைக்கு மரக்கறிப் பண்டங்களை ஏற்றிவரும் வழக்கமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.இந்நிலையில், இன்று சாரதி தனது வேலைப்பளு காரணமாக வேனை வீதியோரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றிருந்த தருணத்தைப் பயன்படுத்திய 16 வயது சிறுவன், எவருக்கும் தெரியாமல் சிற்றூர்தியின் சாவியைத் திருடி வாகனத்தை இயக்கியுள்ளான்.
கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிற்றூர்தி, வீதியில் நின்ற சைக்கிள் ஒன்றின் மீது முதலில் மோதியது. அதனைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சமிஞ்சைக் கம்பம் மற்றும் மின்சாரக் கம்பம் ஆகியவற்றின் மீது மோதிச் சென்றது.
வேகத்தைக் குறைக்க முடியாத சிற்றூர்தி, வீதியோரம் இருந்த பல கடைகளுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்திவிட்டு நின்றது. இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன், சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.
விபத்து நடந்தவுடன் சாரதி சம்பவ இடத்திற்கு வந்து, தனக்குத் தெரியாமல் சிறுவன் சாவியைத் திருடிச் சென்றதாகப் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்து கல்முனை தலைமையக போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உரிமையாளருக்குத் தெரியாமல் சிறுவன் செய்த இந்தச் செயல், அப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
