மாணவர்களுக்கு சார்பான அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுளள்து. இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஒரு பரீட்சார்த்தி தனது விடைத்தாள்களையும் புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் உரிமையுண்டு என தீர்ப்பளித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
2023 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற திறந்த பல்கலைக்கழகத்தின் எல்.எல்.பி தெரிவுப் பரீட்சையில் தோற்றிய தனது மகளின் விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளை வழங்குமாறு ஆர்.ஏ. ஜனக ரோஷன் ரணசிங்க என்பவர் கோரியிருந்தார்.
பல்கலைக்கழகம் இதனை வழங்க மறுத்ததோடு, பரீட்சை தொடர்பான தகவல்களை வெளியிடுவது பரீட்சை செயல்முறையின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பாதிக்கும் என வாதிட்டது.
எனினும், அந்தத் தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பல்கலைக்கழகத்திற்குப் பணிப்புரை விடுத்தது. இதனை எதிர்த்தே பல்கலைக்கழகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தது.
ஒரு பரீட்சார்த்தி தான் எழுதிய விடைத்தாளையும், அதற்கு எவ்வாறு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் கோரினால், அதனை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் "ஒளிந்து பிடிக்கும் விளையாட்டுக்களுக்கு" இடமில்லை. பொது நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 14A உறுப்புரை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் மூலம் வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உள்விதிமுறைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீற முடியாது. ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டமே மேலோங்கும் என தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் தமது விடைத்தாள்களைப் பார்வையிடலாம் என்பதை உறுதிப்படுத்திய நீதிமன்றம், மதிப்பீட்டாளர்களின் (Examiners) அடையாளங்களை இரகசியமாகப் பேண முடியும் என்றும் சுட்டிக்காட்டியது.
பல்கலைக்கழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை உறுதிப்படுத்தியது.
இதன் மூலம் இனிவரும் காலங்களில் மாணவர்கள் தமது விடைத்தாள்களைச் சட்டப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.
