வீடுகள் வாடகைக்கு வழங்குவோருக்கு சற்று முன் வெளியான அவசர எச்சரிக்கை!

இலங்கையில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான இடங்கள் மோசடி மற்றும் குற்றச் செயல்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாடகைக்கு எடுக்கப்படும் வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்து கொண்டு, வெளிநாட்டு நபர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அதிநவீன இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவது அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த கணினிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை கட்டளைச் சட்டத்தின் 76வது பிரிவின்படி, ஒரு வீட்டில் தங்கியிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களைக் கோரும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. எனவே, வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் அல்லது தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை அந்தந்தப் பகுதி காவல்துறை நிலையங்களுக்கு வழங்க வேண்டியது சட்டரீதியான கடமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த விபரங்களை வழங்கத் தவறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், வாடகைக்கு வருபவர்களின் பின்னணி, அடையாளம் மற்றும் அவர்கள் எதற்காக அந்த இடத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதி செய்த பின்னரே ஒப்பந்தங்களை மேற்கொள்ளுமாறு உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து 119 அல்லது 118 ஆகிய அவசர எண்களுக்கோ அல்லது அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கோ உடனடியாகத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



Post a Comment