மட்டு நகரை சோகத்தில் ஆழ்த்திய 19 வயது இளைஞனின் உயிரிழப்பு

 மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலுக்குப் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

கல்முனைக்குடி கடற்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் சடலம் மீட்கப்பட்டு, களுதாவளைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த சனிக்கிழமை இரவு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை ஸ்ரீ முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளைஞர், சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காகச் சிறிய படகில் தனியாகச் சென்றுள்ளார். எனினும், நேற்று காலை ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதை அடுத்து, அவரைத் தேடும் பணிகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர். 

தேடுதல் பணியின் போது இளைஞன் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அதில் அவர் இருக்கவில்லை. இதனால் அவரைத் தேடும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. 

இந்த நிலையில், இன்று அதிகாலை கல்முனைக்குடிக்கும் கல்முனைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அவரது சடலம் மிதப்பதைக் கண்ட மீனவர்கள், அதனை மீட்டுக்கொண்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். 

சடலம் மீதான விசாரணைகளைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை, இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினரால் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment