Posts

அக்குரஸ்ஸ குற்றப்பிரிவு OIC அதிரடியாக பணிநீக்கம், வெளியான காரணம்

 


அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து நீக்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அதிகாரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட உள்ளக விசாரணைகளின்போது, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் அவர் உடனடியாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், குறித்த அதிகாரிக்கு எதிராக மற்றுமொரு பாரதூரமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சிங்களப் புத்தாண்டு தினத்தன்று அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட குழுவினரை குறித்த அதிகாரி கைது செய்ததாகவும், அதன் பின்னர் அவர்களிடமிருந்த ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment