கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முறையான வடிகால் வசதிகள் இன்மை, அனுமதியற்ற கட்டடங்கள், முறையற்ற குடியேற்றங்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமை ஆகியவையே முக்கிய காரணங்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் சுமார் 469 கிலோமீற்றர் நீளமான வடிகால் மற்றும் கால்வாய் கட்டமைப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 20 கிலோமீற்றர் வடிகால் கட்டமைப்புகள் மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அண்மையில் இரண்டு மணித்தியாலங்களுக்குள் சுமார் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியதாகவும், இதனால் வடிகால் கட்டமைப்புகளில் நீர் நிரம்பியதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பின் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண பல அரச நிறுவனங்களை இணைத்து ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
