டுபாயிலிருந்து வந்த கொள்கலனில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி! வெளியான முக்கிய தகவல்



துபாயிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு, செடாவத்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் கொள்கலன் முனையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே பெருமளவிலான சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை (10.11.2026) இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றைச் சோதனையிட்ட காவல்துறையினர், அதற்குள் இருந்த சுமார் 57 இலட்சம் சட்டவிரோத சிகரெட்டுகளை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் 'மான்செஸ்டர்' (Manchester) ரகத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த சிகரெட்டுகளின் மொத்த சந்தைப் பெறுமதி 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஜா-எல மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (11.11.2026) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெருமளவிலான சட்டவிரோத சிகரெட்டுகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்ட விதம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து விசாரணைகள் மூலம் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment