ஹிருணிகாவின் சிறைத்தண்டனை விவகாரத்தில் புதிய திருப்பம்! நீதிமன்றத்தின் முக்கிய நடவடிக்கை!



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீடு நேற்று (11.11.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு தொடர்பில் தீர்ப்பு வழங்குவதில் நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக குறித்த மேன்முறையீடு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய, நீதிபதிகளான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மேன்முறையீட்டை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இளைஞர் ஒருவரை டிபென்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம், ஹிருணிகா பிரேமச்சந்திரவை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதித்திருந்தது.

எனினும், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இரத்துச் செய்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை நிரபராதியாக விடுதலை செய்யுமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பில் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது புதிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளமை வழக்கின் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ள விசாரணை, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சிறைத்தண்டனை தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெறவுள்ளது.


Post a Comment