நாட்டில் மின்வெட்டு எப்போது நிறுத்தப்படும் என்பது தெரியாத நிச்சயமற்ற நிலை நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எரிபொருள் தட்டுப்பாடும் நீண்ட வரிசைகளும் தொடர்வதாகவும், கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவு சார்ந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆற்றல் நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், கொழும்பு துறைமுக நகர முதலீடுகள் தொடர்பான நிலைமையும் நாட்டுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகளை முன்னெடுத்து வருவதாகவும், மக்களையும் அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், நாட்டில் நிலவும் அச்சச் சூழல் காரணமாக 2022ஆம் ஆண்டைப் போன்ற மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கக்கூடும் எனவும் எச்சரித்தார்.
சுற்றாடல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் நீண்டகாலத் தீர்வுகள் அவசியம் என புத்திக பத்திரண மேலும் தெரிவித்தார்.
