ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது, அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் நடவடிக்கை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், அதற்குப் பதிலாக எதிர்ப்புகளை ஒடுக்கும் வகையிலான புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், புதிய சட்டமூலத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்படும் மேலதிக அதிகாரங்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
எனவே, குறித்த சட்டமூலத்தைச் சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் மீளாய்வு செய்து, மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
