வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை அகற்றி, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த சம்பவம் தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (08.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பௌத்த மதத்தின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாகவும், தனிப்பட்ட நலன்களுக்காக அவர் அவ்வாறு செயற்படவில்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் குறித்து ஞானசார தேரர் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 9ஆம் பிரிவின் அடிப்படையில் பௌத்த மதத்தைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் கடமை எனக் குறிப்பிட்ட சாகர காரியவசம், ஞானசார தேரர் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் தொடர்பான விவகாரத்திலும், ஞானசார தேரரின் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பான விவகாரத்திலும் வெவ்வேறு விதமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஒரே மாதிரியான விடயங்களில் இரட்டைத் தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து நீதி அமைச்சு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் முதன்மைப் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட விவகாரத்திலும் அரசியல் பின்னணி இருப்பதாக சாகர காரியவசம் குற்றம்சாட்டியுள்ளார்.
'சிரிலிய சவிய' அமைப்பு 2006ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்பு எனக் குறிப்பிட்ட அவர், கொழும்பு ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலைக்கு CT Scan இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்காகவே அந்த அமைப்பினால் நிதி திரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் சீன அரசாங்கத்தினால் MRI Scan இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்ட போதிலும், CT Scan இயந்திரத்திற்கான தேவை தொடர்ந்ததால் அந்த நிதி வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த கணக்கு முடக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சிரந்தி ராஜபக்ஷ விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்த போதிலும், முறையான அறிவித்தல் இன்றி அதிகாலை நேரத்தில் அவரது இல்லத்திற்குச் சென்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் கட்சித் தலைவரின் மனைவி ஆகியோர் அரசியல் நோக்கங்களுக்காக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமது தலைவர்கள் சட்டரீதியான விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால் விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே அவர்களை விளக்கமறியலில் வைப்பது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
