சுகாதார நிபுணர்களுக்கு புதிய ஊதிய முறைமை! அறிவியல் அடிப்படையிலான கூட்டு யோசனை நாளை முன்வைப்பு

இலங்கையின் சுகாதாரத் துறையில் பணியாற்றும் பல்வேறு தொழில்சார் வல்லுநர்களின் ஊதியம் மற்றும் தொழில்சார் வகைப்படுத்தலை அறிவியல் பூர்வமான அளவுகோல்களின் அடிப்படையில் மாற்றியமைப்பதற்கான கூட்டு தேசிய யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

கட்சி அரசியல் மற்றும் தொழில்சார் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, தகுதி, திறமை, தொழில்சார் பொறுப்பு, பணியின் சிக்கலான தன்மை, ஆபத்து, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் புதிய ஊதிய முறைமை உருவாக்கப்பட வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறிப்பிட்ட ஒரு சேவைப் பிரிவினருக்கு மாத்திரம் சம்பள உயர்வு கோரும் யோசனை அல்ல எனவும், மாறாக அனைத்து தொழில்களையும் ஒரே நியாயமான முறைமையின் கீழ் மதிப்பிடுவதன் மூலம் பொதுச் சேவையின் தொழில்சார் ஊதியக் கொள்கையை நவீனமயமாக்குவதற்கான முன்மொழிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி சுகாதாரத் துறைக்கு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் அரச சேவையின் ஒட்டுமொத்த ஊதிய வகைப்படுத்தல் முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, பல்வேறு சுகாதாரத் தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்சார் அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை இந்தக் கூட்டு யோசனையில் கையெழுத்திடவுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தொழிற்சங்கப் பிரதிநிதி ரவி குமுதேஷ், கடந்த 20 ஆண்டுகளாக தேசிய ஊதியக் கொள்கை மற்றும் அரச சேவை கட்டமைப்புகள் போதியளவில் புதுப்பிக்கப்படாமல் பழைய நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் ஊதியம் அதிகரிப்பதை தாங்கள் எதிர்க்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானதும் நியாயமானதுமான ஊதிய முறைமையை உருவாக்குவதே தங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச சேவையில் நிலவும் தற்போதைய பிரிவினைகள் காரணமாக தொழில்சார் வல்லுநர்களின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இணை சுகாதார சேவைகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் உரிமைகள் தொடர்பில் மனுவொன்றை கையளிக்கவுள்ளதாகவும், ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வுகள் மற்றும் அதற்கேற்ற முறையான ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment