பௌத்த சமூகத்திற்கு எதிரான தாக்குதல்களை எதிர்க்க மகா சங்கம் ஒன்றிணைய வேண்டும்

பௌத்த சமூகத்தின் மீது அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறப்படும் நேரடி மற்றும் மறைமுக நடவடிக்கைகளுக்கு எதிராக மகா சங்கத்தினர் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஞானசார தேரரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த விதம் தொடர்பில் தமது கட்சி கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமை பௌத்த சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், காவி உடைக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் தமது கட்சி செயற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மதம் மற்றும் இன அடிப்படையிலான பிரிவினைகள் நாட்டில் மீண்டும் உருவாகாமல் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட மகேஷ் சேனாநாயக்க, பௌத்த மதத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கருதப்படும் விடயங்களில் மகா சங்கத்தினர் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Post a Comment