மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் என்ற கவலை நிலவியபோதிலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த எதிர்பார்ப்புகளால் இன்று (29) கச்சா எண்ணெய் விலைகள் சரிவைச் சந்தித்தன. இது முந்தைய நாள் எட்டப்பட்ட விலை உயர்வைச் சற்று குறைத்துள்ளது.
பிரென்ட் ரக (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.7 சதவீதம் குறைந்து 114.50 டொலராகப் பதிவானது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் ரக (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.0 சதவீதம் குறைந்து 101.74 டொலராக வீழ்ச்சியடைந்தது.
முன்னதாகப் புதன்கிழமையன்று, பிரென்ட் ரக கச்சா எண்ணெய் 1.3 சதவீதமும், WTI கச்சா எண்ணெய் 3 சதவீதமும் விலை உயர்வைப் பதிவுசெய்திருந்தன.
ஈரானிய பாதுகாப்புச் சபையின் தலைவர் மொஹ்சென் ரெசாயிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் புதுப்பிக்க அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் முயன்றுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இது தொடர்பான விடயங்களை அறிந்த நபர்களை மேற்கோள்காட்டி வோல் ஸ்திரீட் ஜர்னல் (Wall Street Journal) நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
