நுவரெலியாவில் கொட்டித்தீர்த்த கனமழை! வெள்ள அபாயம்; போக்குவரத்தும் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்று (14) இரவு வரை  நுவரெலியா பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

 கடந்த இரண்டு நாட்களாக இரவு வேளைகளில் லேசான மழையே பதிவாகியிருந்த நிலையில், நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் திடீரெனக் கடுமையான மழை பெய்யத் தொடங்கியது. 

தொடர்ச்சியாகப் பெய்த இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் கடும் குளிர்ச்சியான வானிலை உருவாகியுள்ளது.

திடீர் கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து கரையைத் தாண்டிப் பாய்ந்ததுடன், தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

அதேநேரம், நுவரெலியா நகரப் பகுதியில் முறையான வடிகால் அமைப்பு இன்மையும், எழுப்பப்பட்டுள்ள மதில்கள் அடைப்பாக அமைந்திருப்பதும் நீர் வழிந்தோடுவதைப் பாதித்துள்ளன. 

இதனால் சாலைகளில் அதிகளவில் நீர் தேங்கி, பல மணி நேரம் பொதுமக்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக வீதிப் புலப்பாடு வெகுவாகக் குறைந்துள்ளதால் வாகனச் சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர். 

எனவே, வீதிகளில் பயணம் செய்யும் வாகனச் சாரதிகள் அனைவரும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு, மிகுந்த அவதானத்துடன் மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு நுவரெலியாப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment