இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம்! தொடர்ந்து உதவ IMF தயார்

இலங்கைக்கு தேவையான வகையில் தொடர்ந்து ஆதரவு வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக இருப்பதாக, அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை இயக்குநர் சோனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.

பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களின்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிதி செயல்திறன் வலுவடைந்துள்ளதுடன், கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெருமளவில் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நிர்வாகம் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான விடயங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஏழாவது மதிப்பாய்வு தொடர்பில், இம்மாத ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் எட்டியுள்ளது. இதன் மூலம் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த மதிப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், அதற்குச் சமமான சிறப்பு எடுப்பனவு உரிமைகள் (SDR) இலங்கைக்குக் கிடைக்கும்.

இந்த இணக்கப்பாடு எதிர்வரும் வாரங்களில் பணிப்பாளர் சபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்த ஜெயின்-சந்திரா, மார்ச் மாதத்தில் திட்டம் நிறைவடைவதற்கு முன்னர் மற்றொரு மதிப்பாய்வுக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, புதிய நிதி ஏற்பாடுகள், கொள்கை ஆலோசனைகள், கண்காணிப்பு மற்றும் நிறுவனங்களின் திறன் மேம்பாடு உள்ளிட்ட வழிகளிலும் இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட IMF தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment