இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட யானைகளைத் திருப்பி அனுப்பக் கோரி தாய்லாந்தில் அழுத்தம்!

இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளையும் மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அழைக்குமாறு, விலங்கு உரிமை ஆர்வலர்கள் தாய்லாந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி   தெரிவித்தார்.

  “குறித்த இரு யானைகளும் இலங்கையில் மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தாய்லாந்து அதிகாரிகளுடன் எமது அமைச்சு தொடர்பில் இருந்து வருகின்றது.

தாய்லாந்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த எதிர்ப்பானது, அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு போராட்டமாக இருக்கலாம். பாங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாகவும் சில குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. எனினும், இந்த யானைகளின் உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, நாம் கால்நடை அறுவைச் சிகிச்சை நிபுணர்களை நியமித்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, பௌத்த மத ஊர்வலங்களில் புனிதப் பண்டங்களைச் சுமந்து செல்வதற்காக 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரச குடும்பத்தினரால் இலங்கைக்குப் பரிசாக அளிக்கப்பட்ட 'சக் சுரின்' (Sak Surin) என்ற 29 வயதுடைய ஆண் யானை, மீண்டும் தாய்லாந்திற்கே அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யானையைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதாகவும், அதன் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட இராஜதந்திரப் பிணக்கின் காரணமாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி அந்த யானை விமானம் மூலம் தாய்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

Post a Comment