கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 84 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்தி வந்த இரண்டு இலங்கைப் பயணிகள் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், இன்று அதிகாலை 2.13 மணிக்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் GN-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில், தான் கொண்டுவந்த இரண்டு பயணப் பைகளையும் கைவிட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பைகளிலிருந்து 35,600 ‘பிளாட்டினம்’ ரக சிகரெட்டுகள் அடங்கிய 178 அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, துபாயிலிருந்து ஃப்ளைதுபாய் விமானம் FZ-569 மூலம் இன்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஹெட்டிபோல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த 21,000 ‘பிளாட்டினம்’ ரக சிகரெட்டுகள் அடங்கிய 105 அட்டைப் பெட்டிகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரையும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
.jpg)