கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (19) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நேற்று இரவு பிக்குகளும் அங்கு திரண்டிருந்த பொதுமக்களும் தீப்பந்தங்களை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி மதியம் பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஆரம்பமானது. அன்றைய தினம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு கூடாரம் அமைக்க முயன்றபோது பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை பூங்காவை விட்டு வெளியேறப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 16ஆம் திகதி, போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் முதலில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒன்றுகூடியதுடன், பின்னர் புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடினர்.
எனினும், அந்தக் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவித்த பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.
