பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பௌத்த பிக்குகள் மற்றும் ஆதரவாளர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்துவதற்கு எதிராகப் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்கள் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகள் அங்கிருந்து வெளியேறினர்.
இந்நிலையில், அவர்கள் பௌத்தசாசன, மத மற்றும் கலாபூர்வ விவகாரங்கள் அமைச்சில் நடைபெறும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
