எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில், நிர்ணயிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல்களை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமை தொடர்பில், உரிமையாளருக்கு 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட சோதனையின்போது, 120 ரூபா அதிகூடிய சில்லறை விலை அச்சிடப்பட்ட ஒரு லீற்றர் குடிநீர்ப் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 80 ரூபா அதிகமாக அறவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த செப்டம்பர் 29ஆம் திகதியுடன் காலாவதியான ஆறு குளிர்பானப் போத்தல்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, நீதிமன்றம் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.
வணிக நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலையைப் பின்பற்றுவதுடன், காலாவதியான பொருட்களை உடனடியாக விற்பனையிலிருந்து அகற்ற வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.
அதேவேளை, உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை வாங்கும்போது அவற்றின் காலாவதித் திகதியைச் சரிபார்க்குமாறும், அதிக விலைக்கு விற்பனை செய்தல் அல்லது காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
