பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

 நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு, உயர்நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக இந்தப் பிடியாணையை நடைமுறைப்படுத்துமாறும், அதனை விரைவாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய இரண்டு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கஹவத்தை பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பின்னர் மூவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தரப்பினால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அதன் விசாரணைகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், மூன்று பிரதிவாதிகளையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரேமலால் ஜயசேகர ஆஜராகவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளதாகச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான திறந்த பிடியாணையைப் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

Post a Comment