அல்லாவின் ஆணைக்கு மரணதண்டனை விதிக்குமா டுபாய்..!

 

துபாயில் இருந்து டெல் அவீவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தில், காக்பிட் கோடரியால் இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவரைக் கொடூரமாகத் தாக்கி விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி ஹமாம் அல்-ஹம்மாமி மீது, பயங்கரவாத வழக்குகளின் கீழ் மரண தண்டனை விதிக்க ஐக்கிய அரபு அமீரகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற இந்த விமானத்தில், உதவி விமானி திடீரென கேப்டனை தாக்கி விமானத்தைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றார்.

இந்திய கேப்டனின் துணிச்சலான நடவடிக்கையாலும், பயணிகள் மற்றும் பிற ஊழியர்களின் உதவியினாலும் விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சவூதியில் கைது செய்யப்பட்ட ஹம்மாமி, பின்னர் மேலதிக விசாரணைக்காக அமீரகத்திற்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையில், விமானத்தை விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டதாகவும், தனக்கு சாவுக்கு பயமில்லை என்றும் அது அல்லாவின் ஆணை என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிரியா உள்நாட்டு போரின் போது அவர் தீவிரவாத பாதைக்கு மாறினாரா அல்லது இணையதளம் மூலம் தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டாரா என்பது குறித்து அமீரக மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றியபோது, தீவிரவாத இணையதளங்களைப் பார்த்ததற்காக அவர் பறக்கத் தடை செய்யப்பட்டு, மாற்றுப் பணிக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், உரியப் பின்னணிப் பரிசோதனைகள் இன்றி ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் அவர் மீண்டும் உதவி விமானியாக இணைந்தது எவ்வாறு என்பது குறித்துப் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.


Post a Comment