உண்மைக்காகப் பேச சிறைத் தண்டனைக்கும் அஞ்சமாட்டேன்!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் (05) மீண்டும் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலபடஅத்தே ஞானசார தேரர், தாம் நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே தொடர்ச்சியாகப் பணியாற்றியதாக நீதிமன்ற வாசலில் வைத்து  ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவுகளுக்குத் தாம் எப்போதும் மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் சுயநலமின்றி நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவுமே செய்யப்பட்டவை எனக் கூறினார்.

 கடந்த 25 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்காகவும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் தாம் குரல் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் உள்ள தீவிரவாதத் திட்டங்கள் குறித்து தாம் 2014 ஆம் ஆண்டிலிருந்தே பகிரங்கமாக எச்சரித்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.

 தாம் நீதிமன்றத்தைப் புறக்கணிப்பதாக எழும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாகவே தலைமைத் துறவிகளின் வழிகாட்டுதலின்படி தியானப் பயிற்சிகளுக்காக ஆரண்யத்திற்குச் சென்றிருந்ததாகத் தெளிவுபடுத்தினார்.

உண்மைக்காகப் பேசுவதற்கோ அல்லது சிறைத் தண்டனைக்கோ தாம் என்றும் அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்த ஞானசார தேரர், மரணம் சம்பவிப்பதாக இருந்தாலும் நாட்டின் உண்மை நிலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் காரசாரமாகத் தெரிவித்தார்.

 ஒரு மனிதன் என்ற ரீதியில் தமக்கு மனவேதனைகள் இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்காகத் தொடர்ந்து நிலைநிற்பதாகக் கூறி அவர் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிச் சென்றார்.

Post a Comment