எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை திஸ்ஸ அத்தநாயக்க கடுமையாக விமர்சித்தா

 
எரிபொருள் மானியம், எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் மானியத்திற்காக திறைசேரியிலிருந்து 4,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், அதன் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

உலகளாவிய போர் சூழ்நிலையை காரணம் காட்டி எரிபொருள் விலையை உயர்த்த மாட்டோம் என்றும், வரிகளை குறைப்போம் என்றும் அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், டீசல், 92 மற்றும் 95 ஒக்டேன் பெட்ரோல் ஆகியவற்றின் துறைமுக விலைக்கும் சந்தை விற்பனை விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், இந்த இடைத்தரகர் இலாபம் யாருக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வறுமை, மந்தபோஷணை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், மக்கள் எதிர்கொள்ளும் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களில் அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தித் திட்டங்கள் போதுமான அளவில் முன்னெடுக்கப்படாமல், மக்கள் மீது அதிக வரிச் சுமை சுமத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், நிலக்கரி இறக்குமதி, அரிசி, உப்பு மற்றும் திறைசேரி நிதி தொடர்பானதாகத் தாம் குறிப்பிட்ட பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் தலைவர்களின் ஆட்சிக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எதிர்பார்த்த அளவில் முன்னோக்கி கொண்டு செல்லத் தவறியுள்ளதாகவும் விமர்சித்தார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இரு கட்சிகளும் இணைவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர்கள் வெளியிடுவார்கள் எனவும், கிராமப்புற மட்டத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Post a Comment