தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன சேவைப் பகுதியில் இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முழுமையான துணை நிறுவனமான கெனொவின் ஹோட்டல்ஸ் அண்ட் ஸ்பாஸ் (தனியார்) நிறுவனத்தினால் குறித்த சேவைப் பகுதி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அங்கு தற்போது காணப்படும் கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளின் கொள்ளளவு போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நாளொன்றுக்கு தலா 200 கனமீற்றர் கொள்ளளவைக் கொண்ட இரண்டு புதிய சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை நிர்மாணிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 562.04 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்குவதற்கு ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அவர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
