கடத்தல் மன்னன் ரன் மல்லி கைது
பல்வேறு திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான சரித் சந்தகலும் ஹேவத் 'ரன் மல்லி' (Ran Malli) பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரால் (Interpol) விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தரவு அமைப்புகளின் அடிப்படையில் பல்கேரியப் பாதுகாப்புப் பிரிவினரால் சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையை சர்வதேச பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளதோடு, வெளிவிவகார அமைச்சு ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் அல்லது நாடுகடத்தும் சட்டத்தின் (Extradition law) கீழ் அவரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
திகந்த பிரதேசத்தைச் சேர்ந்த சரித் சந்தகலும், நீண்ட காலமாக துபாயில் தங்கியிருந்து கொண்டு நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்துள்ளார்.
தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்புமிக்க போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக ஹேவத் 'ஹரக் கட் டா' என்பவனின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான செயற்பாட்டு உறுப்பினராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்வதேச சுற்றிவளைப்புகளில் இருந்து தப்புவதற்காக போலியான தகவல்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற போதே அவர் பல்கேரியப் பாதுகாப்புப் பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, அவரை நாட்டுக்குப் பொறுப்பேற்றதன் பின்னர் ஐஸ் போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) என்பன விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன.
'ரன் மல்லி' மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்:
• ஐஸ் போதைப்பொருள் கடத்தல்: 2025 நவம்பர் 12 ஆம் திகதி கிரிந்த அந்தகலவெல்ல கடற்கரைப் பிரதேசத்தில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு, தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது ரூபா 30 கோடிக்கும் அதிக பெறுமதியான 345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
•
• இந்தப் போதைப்பொருள் தொகையின் உண்மையான உரிமையாளர் துபாயில் தலைமறைவாகியுள்ள 'ரன் மல்லி' என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியதுடன், துபாயில் இருந்தவாறே சந்தேக நபர்களுக்கு தலா 5 இலட்சம் வீதம் பணம் வழங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருளைக் கொண்டு செல்வதற்கு அவர் பணிப்புரை விடுத்திருந்தார்.
•
• இந்தச் சம்பவம் தொடர்பில் 8 சந்தேக நபர்களும் 6 வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தால் 7 நாள் தடுப்புக் காவற் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
• கொட்டாவையில் பணம் புதைக்கப்பட்ட சம்பவம்: 2021 ஜூலை மாதத்தில் கொட்டாவ (பன்னிப்பிட்டிய) பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட 13.9 மில்லியன் ரூபா பணத்தைக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் வெற்றியடைந்தனர்.
•
• சம்பந்தப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த 'ரன் மல்லி'யின் மருமகனான தினேஷ் லக்மால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டின் பணக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 'ரன் மல்லி'யினால் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
• ஆழ்கடல் ஹெரோயின் கடத்தல்: 2022 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மகா ராவண கோட்டைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து கைப்பற்றிய 331 கிலோகிராம் ஹெரோயின் தொகைக்குப் பின்னணியிலும் 'ரன் மல்லி' இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.


