இலங்கையின் பல பகுதிகளுக்கு இடி மின்னல் எச்சரிக்கை! 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம்

இன்று (15) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னல் மற்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவு துணை இயக்குநர் ஜீவன் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாடு, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடி மின்னலுடன் கூடிய மழையின்போது பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தீவின் வடபகுதி மற்றும் கடலோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் படகு போக்குவரத்தில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும் மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எல் நினோ தாக்கத்தின் காரணமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு வழமையைவிட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் அல்லது சூறாவளி போன்ற வானிலைச் சூழல்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்தும் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருகிறது.

Post a Comment