இலங்கை–அசர்பைஜான் உறவில் புதிய நகர்வு! எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பேச்சு


இலங்கைக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில், இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை பாக்கு நகரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அசர்பைஜானின் பாக்கு நகரில் நடைபெறும் ஆசியாவில் தொடர்பாடல் மற்றும் நம்பிக்கைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாட்டின் (CICA) ஏழாவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கைத் தூதுக்குழுவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த உச்சிமாநாட்டில், “வலுவான CICA: ஆசியாவில் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி” என்ற கருப்பொருளின் கீழ் இலங்கையின் உத்தியோகபூர்வ அறிக்கையையும் அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

மேலும், கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட CICA உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அசர்பைஜான் அதிகாரிகள் மற்றும் CICA பொதுச் செயலாளர் ஆகியோருடனும் அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் ஆசிய நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், குறிப்பாக மத்திய ஆசியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரங்களுடன் புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CICA என்பது ஆசியா முழுவதும் ஒத்துழைப்பு, அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் பிராந்திய அரசுகளுக்கிடையிலான அமைப்பாகும்.

Post a Comment