இலங்கையில் கைது செய்யப்பட்ட ஷென் ரிச்சர்ட் என்ற சீனப் பிரஜை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இணையக் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேகநபருக்கு எதிராக சீன அரசாங்கம் இரண்டு தடவைகள் கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும், முதலாவது உத்தரவு 2017ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்படி, சந்தேகநபர் 2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளமையுடன், நுகேகொடையில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
சந்தேகநபரின் பெயரில் மூன்று கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என கூறப்படும் நிலையில், வனுவாட்டு நாட்டினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு மட்டுமே தமக்குச் சொந்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு 20,000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாக வழங்க முயற்சித்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மெக்சிகோ, ஜப்பான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
39 வயதுடைய சந்தேகநபர், 2020ஆம் ஆண்டு தனது வாழ்க்கைத் துணையிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்துள்ளமையுடன், இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீனா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர், அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
