பிலிப்பைன்ஸில் சட்டவிரோத இணைய சூதாட்ட நிறுவனங்களுக்கு எதிரான இந்த ஆண்டின் மிகப்பெரிய நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு குடிவரவு பணியகம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் உள்ளூர் ரீதியாக POGO என அழைக்கப்படும் இணைய சூதாட்ட நிறுவனங்களுக்கு 2024ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மனிதக் கடத்தல், பணமோசடி, இணைய மோசடி, கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இந்நிறுவனங்களை பயன்படுத்துவதாகக் கூறப்பட்டதையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 2) தெற்கு மிண்டனாவோ பகுதியில் உள்ள இரு இடங்களில் இராணுவம் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
முதல் இடத்தில் 110 சீனப் பிரஜைகள், 2 கம்போடியர்கள் மற்றும் ஹொங்கொங்கைச் சேர்ந்த ஒருவர் உட்பட 113 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது இடத்தில் மேலும் 131 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சீனப் பிரஜைகள் எனவும், மலேசியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் பிரஜைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கைகளின்போது பெருமளவிலான கணினி உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தொடர்பில் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஏனையவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
