இரத்தினபுரியில் அரச ஊழியர்களுக்காக 200 அடுக்குமாடி வீடுகள் - ரூ.5,886 மில்லியன் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இரத்தினபுரி புதிய நகரில் அரச ஊழியர்களுக்காக 200 வீட்டலகுகளைக் கொண்ட உத்தியோகபூர்வ அடுக்கு

மாடி வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2025 ஒக்டோபர் 14ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் 200 வீட்டலகுகளைக் கொண்ட வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொலின் கிறசன்ட் பகுதியில் தற்போது அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய வீடமைப்புத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய அரச உத்தியோகபூர்வ இல்லங்கள் அமைந்துள்ள அரச காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைத்து, அவற்றை எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 5,886.97 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் ஐந்து ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment